×

தனியார் நிதி நிறுவனம் திடீர் மூடல் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அருமனை : அருமனை அருகே மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர்.
அருமனை பாக்கியபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், பொதுமக்கள் நகை அடமானம் மற்றும் பணம் முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வேறு நிதி நிறுவனங்களில் கூடுதல் தொகைக்கு மறு அடமானம் வைத்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வங்கி இயக்குநரும், அங்கு பணியாற்றிய 30 வயது பெண் மேலாளரும் ஒரு தரப்பின் மீது மற்றொருவர் என போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 10 நாட்களில் பணம், நகையை திருப்பி தர அந்த நிதி நிறுவன நிர்வாகிகள் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை. இதனால், நகை அடகு வைத்தவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனத்திற்கு வந்து சென்றனர்.

நேற்று முன்தினம் காலையிலும் நிதி நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் நேராக அருமனை காவல் நிலையத்துக்கு சென்றனர். அங்கு தங்களிடம் இருந்து புகாரை பெற்றுக்கொள்ளுமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும், உங்கள் நகை அடகு வைத்த சான்றுகள், முகவரியை எழுதித்தருமாறும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தகவல்களை கொடுத்துவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post தனியார் நிதி நிறுவனம் திடீர் மூடல் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Arumanai ,Arumanai Pakhyapuram ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது